சென்னை: கோவை கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்கள் மீது ‘உபா’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கோவை மாநகர காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு முதல்நாள் கடந்த 23ஆம் தேதி கோவையில் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார். கார் வெடி விபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்தது. மேலும், ஜமேசா முபின் வீட்டை போலீசார் சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கார் குண்டு வெடித்ததாக கூறப்படும் இடத்தில் உருக்குலைந்து கிடந்த காரை காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, கோவை ஐஜி சுதாகர், கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய  டிஜிபி சைலேந்திரபாபு, இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. தடய அறிவியல் துறையைச் சேர்ந்த முழு குழுவினரும், விபத்து நிகழ்ந்த இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையின் இயக்குநரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். தடயங்களைச் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. கோவையில் இருக்கக்கூடிய வெடிகுண்டு நிபுணர் குழுவினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கமாண்டோ பிரிவைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்களும் விமானத்தில் இங்கு வந்துள்ளனர். போலீஸ் மோப்ப நாய் விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவில்தான் மற்ற விவரங்களை கூற முடியும். தற்போதைக்கு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க என்ஐஏ உதவி தேவைப்படவில்லை. புலன்விசாரணையில் அதுபோன்று ஏதாவது தென்பட்டால்தான் அதுகுறித்து சொல்லப்படும்” என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கூறிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை,  காவல்துறை எதையோ மூடி மறைக்கிறது  என்றும், கோவை யில் 55 கிலோ பொட்டாசியம், அமோனியம், சோடியம் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்து காவல்துறை ஏன் வெளியே சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன்,  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கலவர பூமியாக கொங்கு மண்டலம் மாறி வருகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல்ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை உக்கடம் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் கைதான 5 பேர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA -உபா) கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, கைது செய்யப்பட்டவர்கள் மீது  கூட்டு சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்றும் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை, என்.ஐ.ஏ விசாரித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இன்றுமாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

 

மேலும், குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து 75கிலோ வெடிமருந்திற்கான வேதிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், சிலிண்டர் விபத்துக்குள்ளான கார் 10 பேர் கை மாறி இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

கார் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியாகி உள்ளது உறுதியாகி உள்ளது. மேலும் அவரது வீட்டில் இருந்து 75கிலோ வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதை ஒப்புக்கொண்டுள்ள காவல்துறை, கார் வெடித்தது விபத்து என்று கூறி வருகிறது. காவல்துறையினரின் இதுபோன்ற அறிவிப்புகள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருவதுடன், தமிழகஅரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.

https://patrikai.com/coimbatore-car-blast-minister-senthil-balaji-responds-to-state-bjp-leader-annamalai/