கோத்ரா கலவரத்துக்குப் பிறகு குஜராத் சட்டமன்றத்தில் பேசிய அம்மாநில ஆளுநர் குஜராத் அமைதியற்ற மாநிலம் என்று உரையாற்றினாரா அல்லது மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே ஆற்றினாரா ? என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.

அரசின் கொள்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் மாற்றுக் கருத்து கூறுவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சமீப நாட்களாக முழுமூச்சாக மேற்கொண்டு வரும் நிலையில் ஆளுநரின் இந்தப் பேச்சை அடுத்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் :

மாநில அரசு தயாரித்தளிக்கும் உரையை அப்படியே அவையில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு விருப்பம் இல்லையென்றால் உரையாற்றவே வந்திருக்கக் கூடாது.

ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட பதவி அல்ல, அந்தப் பதவிக்கு வந்தவர் அன்தன்மையோடுதான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர தனி ஆவர்த்தனம் காட்ட முனையக்கூடாது என்றும் கட்டமாக கூறியுள்ளார்.

“ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துகளில் இருந்து, ‘ஆளுநர் பதவி’க்காக அவர் தமிழகத்துக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது. கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார் என்பதைத்தான் அவரது கருத்துகள் காட்டுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான். அது இந்த மாநிலத்தின் வளர்ச்சியில் எதிரொலிக்கிறது. ஆனால், அவரது உரைகள், இந்த அமைதியைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளன என்பதுதான் உண்மை என்று தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி : ஆளுநருக்கு பதிலடி கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை…