கழிவுநீரை சுத்தம் செய்யும்போது இறக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்: மாற்று வேலை தர அரசுக்கு கோரிக்கை

Must read

சென்னை:

கழிவுநீர் சுத்தம் செய்யும்போது இறப்போர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கேரளாவைச் சேரந்த காங்கிரஸ் எம்பி. முள்ளப்பல்லி ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, “கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீரை சுத்தப்படுத்தும்போது இறந்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகபட்சமாக 144-ஆக உள்ளது. இரண்டாவதாக, உத்திரப்பிரதேசத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

144 பேரது குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மனிதர்களே கழிவுகளை அகற்றினால், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் புதுடெல்லியில் மட்டுமே வழக்கு பதியப்படுகிறது என்று கூறினார்.

இந்நிலையில், கோயம்புத்தூரில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வீடு ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தமிழ்நாடு துப்புரவுத் தொழிலாளர் சங்க அமைப்பாளர் சாமுவேல் வேளாங்கன்னி இது பற்றி கூறும்போது, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் கையாலேயே கழிவுநீரை சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறன்றனர்.

எனினும், இந்த தொழிலில் எத்தனை பேர் ஈடுபட்டு வருகின்றனர் என்ற விவரம் தமிழக அரசிடம் இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

தமிழகத்தில் கும்பகோணம் நகராட்சியில் மட்டுமே கழிவுநீரை அகற்ற முற்றிலும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய ரோபோட் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 8 மாதங்களாக இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கும்பகோணத்தில் உள்ள 250 பாதாளச் சாக்கடைகளிலும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்து வருகின்றனர்.

அரசு அலுவலகங்களில் கழிவுநீர் அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்றாலும், தனியார் மனிதர்களையே பயன்படுத்துகின்றனர்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் லாரிக்கு குறைந்தது ரூ. 5 ஆயிரம் தரவேண்டியுள்ளது. அதேசமயம் மனிதர்களை வைத்து சுத்தம் செய்தால், ரூ. 1,000 முதல் 1500 வரை கொடுத்தால் போதும்.

கழவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றுகூட குடியுருப்பு வாசிகளுக்கு தெரிவதில்லை. தொழிலாளர்களும் எவ்வித பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை செய்யாமலேயே இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.

இறந்தபின் இழப்பீடு தருவதைவிட, அவர்களுக்கு கவுரவமான வேலை கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

More articles

Latest article