சென்னை: தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 3-ம் இடம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன என  பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி, கவர்னர் ஆர்.என்.ரவிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள தொழிற் நிறுவனங்களில் பணியாற்றும் சிறந்த மனிதவள மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு ( HR ) விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் வளங்கள் பல இருந்தும் மஹாராஷ்டிரா, ஹரியானா போல் ஏன் தமிழ்நாட்டால் தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். மேலும்,.இந்தியாவின் ஒட்டுமொத்த ஆற்றல் அதிகரித்துள்ளதாகவும், பல இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கி வருவதாகவும், 2047-ல் 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது பல மடங்கு வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா இருக்கும் என்று கூறியவர்,  பல வித வளங்கள்  ஏன் தமிழ்நாட்டினால் தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவுக்காக தமிழ்நாடு வளர வேண்டும் என்றும் மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு 3வது இடத்தில் இருப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், எளிதாக தொழில் செய்யக்கூடிய தரவரிசையில் சிறந்த சாதனையாளர்களில் ஒருவராக TN அறிவிக்கப்பட்டுள்ளது. புள்ளி முறைப்படி 14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.

முதலீட்டின் முக்கிய மையமாக தமிழகத்தை மேம்படுத்துவதில் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்காக மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தென்னரசு  மற்றும் அவரது குழுவினரை நான் வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளர். அத்துடன், பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும் இணைத்துள்ளார்.