சென்னை
கோவளம் – மெரினா இடையே உள்ள 30 கிமீ கடற்கரை பகுதியை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
சென்னை நகரில் வடக்கே எண்ணூர் சிற்றோடையில் இருந்து தெற்கே கோவளம் வரையில் கடற்கரை பகுதி நீண்டு இருக்கிறது. இப்பகுதியில் சில இடங்கள் தொடர்ச்சியாக இல்லாமல் துண்டுகளாக இருக்கிறது. இடையே மெரினா கடற்கரை பகுதி, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில்தான் அதிக அளவில் பொதுமக்கள் பொழுதுபோக்குக்காக அடிக்கடி கூடுகின்றனர்.
தவிர 20க்கும் மேற்பட்ட இடங்கள் தொடர்பறுந்து பயன்படுத்த தக்கதாக இல்லை. இந்த பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாகவும், சென்னையில் உள்ள தேசிய கடற்கரை ஆய்வு மதிப்பீட்டு மையம் தெரிவித்துள்ளபடி இந்த கடற்கரை பகுதியில் 3 கிமீ பகுதியில் குறைந்த அளவுக்குக் கடல் அரிப்பும், 7 கிமீ நீளத்துக்கு குறைந்த அளவில் மணல் குவியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடற்கரைப் பகுதியில் தீவிரமான மேலாண்மையும் செய்ய வேண்டியுள்ளது.
கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இது குறித்து விவாதிக்கப்பட்டு வீட்டு வசதித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார், அந்த அறிவிப்பில் சென்னை மெரினா -கோவளம் இடையே 30 கிமீ நீளத்துக்கு ரூ.100 கோடி செலவில் மறு சீரமைப்பு புத்தாக்க திட்டம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் செயல்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகச் சிறப்பு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதினார். அந்த கருத்துருவை நன்கு பரிசீலித்த அரசு மேற்கண்ட திட்டத்தைச் செயல்படுத்தவும், சிறப்பு நிறுவனம் அமைக்கவும், ரூ.100 கோடி நிதி ஒதுக்கியும் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கென 17 பேர் அடங்கிய குழு ஒன்று அமைத்துள்ளது.