பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி கோயில்
தலவரலாறு
முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாகத் தொடுக்க வேண்டும் என்ற விநோதமான ஒரு போட்டியை அறிவித்தான். இதில் போட்டியிட்ட அறிஞர்கள் பலரும், மாலை தொடுக்க முயன்று, முடியாமல் தோற்றனர். வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூற, மன்னனும் சம்மதித்தான்.
அரசவைக்குச் சென்ற அப்பெண், ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கி மறுமுனையில், சர்க்கரைப்பாகு தடவிய நூலை வைக்க, சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், பாசிமணியின் துளை வழியே உள்ளே சென்று, நூலை இழுக்க, அதற்காகக் காத்திருந்த அப்பெண், நூலை இழுத்து மாலையாக்கினாள்.
மகிழ்வுற்ற மன்னன், மதிநுட்பமான அப்பெண்ணைப் பாராட்டி பரிசு வழங்கியதோடு, அவளையே மணக்க விரும்பி அவளைக் கட்டாயப்படுத்த, அப்பெண், தீக்குளித்துவிட்டாள். மனிதத்தன்மையில் இருந்து தெய்வத்தன்மைக்கு உயர்ந்த அப்பெண்ணை அடக்கம் செய்த இடத்திலிருந்து மண் எடுத்து வந்து இங்கு வைத்து கோயில் கட்டி, முத்தால பரமேசுவரி என்று பெயர் சூட்டினர் என்பது வரலாறு.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில். அழகு மிளிரும் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், வளைவான விதானத்துடன் ஒரு மண்டபம். அதற்கடுத்து ஸ்ரீ கருப்பண்ணசாமி சன்னிதி. இதன் தூண் வேலைப்பாடுகள் கலைநுட்பத்துடன் திகழ்கின்றன.கருப்பண்ணசாமியைத் தரிசித்து நகர்ந்தால் கொடிமர மண்டபம், அலங்கார மண்டபம், ஸ்ரீவிநாயகர் சன்னிதி ஆகிய வற்றைத் தரிசிக்க முடிகிறது. இந்த இடத்தில் இருந்து மேற்கே ஸ்ரீபோத்திராஜாவும், ஸ்ரீமார்த்தாண்டி அம்மனும் வடக்கு நோக்கி அருள்கிறார்கள். அம்மன் உக்கிரமாகக் காட்சி தருகிறாள். ஸ்ரீபோத்திராஜா கிராமக் காவல் தெய்வமாகப் போற்றப் படுகிறார்.
கருவறை நோக்கிச் சென்றால், அனுக்கை விநாயகர், துவார சக்திகள், திரௌபதி ஆகியோர் காட்சி தருகிறார்கள். அம்பாள் கருவறை அர்த்தமண்டபத்துடன் திகழ்கிறது.  கருவறையில் முத்தால் பரமேசுவரியம்மன், சாந்த சொரூபமாகத் தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், டமருகம் ஆகிய ஆயுதங்கள் வைத்திருக்கிறாள்.
அம்பாள் சன்னதிக்குப் பின்புறத்தில் மாரியம்மன் சன்னதி இருக்கிறது.வடக்குப் பிராகாரத்தின் இறுதியில் மேற்கு நோக்கி பைரவரும், அவருக்குப் பின்புறம் ஸ்ரீ ஆஞ்சநேயர் தெற்கு நோக்கியும் அருள்கின்றனர்.
அமைவிடம்
பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து இளையான்குடி செல்லும் வழியில் வைகை பாலம் நிறுத்தத்தில் இறங்கிச் செல்ல வேண்டும்.