சென்னை

ன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி 44ஆம் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை அருகில் உள்ள  மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கவுள்ளது.  இன்று மாலை இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி பங்கேற்று போட்டியைத் தொடங்கி வைக்கிறார். அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் விழாவில் பங்கேற்கின்றனர்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு  பிரதமர் மோடி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமான நிலையத்தில்   பிரதமரை ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.  மோடி50 நிமிடங்கள் விமான நிலைய விஐபிக்கள் வரவேற்பறையில் ஓய்வெடுத்த பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு வருகிறார்.

பிரகு அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்கிறார்.  அவர் வந்ததும், அவரால் டில்லியில் தொடங்கி வைக்கப்பட்டு 75 நகரங்களைக் கடந்து வந்துள்ள ஒலிம்பியாட் ஜோதி, மேடைக்கு எடுத்து வரப்படும். பிறகு போட்டியைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.   இந்த போட்டியில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாட்டு வீரர்களும் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருங்கிணைப்பில் தமிழக கலை பண்பாட்டுத்துறை ஏற்பாட்டின் பேரில், தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள், சிறப்பு நடன நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இதில் இந்தியப் பண்பாடு, கலாச்சாரம், மரபு அடிப்படையிலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.