சென்னை

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரில் ஆய்வு நடத்தி உள்ளார்.

மாணவி ஒருவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்ற நபரை கைது செய்துள்ளனர். பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் பல்கலைக்கழக பேராசிரியர்களை சந்தித்து பேசி அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு 25 மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளையும் ஆளுநர் கேட்டறிந்தார்.

ஆளுநர் வருகையை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆளுநரின் ஆய்வின்போது தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கோபால், தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் ஆபிரகாம், பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.