சென்னை: நாடு முழுவரும் ஜனவரியில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தும் வகையில், கோல்டு ஸ்டோரேஜ் (பிரிட்ஜ்) தேவை என தமிழக அரசு, மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

நாடு முழுவதும் இன்னும்  ஓரிரு மாதங்களில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு அளிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பூசியை 17 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு கீழ் வைக்க வேண்டும் என்பதால், மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க தேவையான ஸ்டோரேஜ் இருக்கிறதா என்பது குறித்து மத்தியஅரசு விளக்கம் கேட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை பாதுகாப்பாக வைக்கும் மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  அதன்படி, தொடர் வசதிகள் கொண்ட 5,448 குளிர் சாதன சேமிப்பான்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி,  15 நடமாடும் உறைவிப்பான் , 2,769 பனி மூடிய குளிர்சாதன பெட்டிகள் மற்றும் 2,661 ஆழமான உறைவிப்பான் ஆகியவை இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. ஆனால், இவை போதுமானது இல்லை.

இதையடுத்து, மேலும் கோல்டு ஸ்டோரேஜ் தேவை என மத்தியஅரசுக்கு தமிழகஅரசு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கூறிய பொது சுகாதார இயக்குநர் டாக்டர் டி.எஸ்.செல்வினாயகம், அரசு ஏற்கனவே 47,000 தடுப்பூசி மையங்களை அடையாளம் கண்டுள்ளது. தடுப்பூசிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல சரியான திட்டமிடல் தேவை என்று தெரிவித்துள்ளார்.