சென்னை

மிழக அரசு பறவை இனங்களைப் பாதுகாக்க மாநில பறவை ஆணையம் அமைக்க உள்ளது.

தமிழக தலைமைச் செயலர் வெ இறையன்பு நேற்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில்  ”தமிழக அரசு பறவை இனங்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 17 பறவைகள் சரணாலயங்கள் இருக்கின்றன. தமிழக அரசு பறவைகள் இனங்களை பாதுகாப்பதை மேலும் பலப்படுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதையொட்டி அரசு மாநில பறவை ஆணையத்தை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

தமிழக அரசுக்கு இது குறித்த முன்மொழிவு முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் இருந்து வரப் பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் மாநில பறவை ஆணையத்துக்குத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதன் தலைவராக இருப்பார்.

தவிர வருவாய் நிர்வாக ஆணையரின் பிரதிநிதி, ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சி ஆணையரின் பிரதிநிதி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனப் படைகள் தலைவர்), பொதுப் பணித் துறை மற்றும் நீர்வளத் துறை தலைமை பொறியாளர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக இயக்குனர், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (புலிகள் திட்டம்), கூடுதல் முதன்மை தலைமை பாதுகாவலர்(வன விலங்குகள்) ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இதற்கு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வார்டன் உறுப்பினர் செயலாளராக இருப்பார். ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள், அனைத்து பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கூடு கட்டுவதற்கு வசதியும், முன்னேற்றமும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் தயாரிக்க வேண்டும். ஆகியவை ஆகும்.

தமிழகத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் வசிக்கும் இடங்களுக்கான வரைபடங்களைத் தயாரிக்க வேண்டும். பறவைகள் சரணாலயத்தைப் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் மறு ஆய்வு செய்தல், இந்த பணிகளுக்காக உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி அளித்துப் பயன்படுத்திக் கொள்வது போன்ற பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ளும்”.  எனக்  கூறப்பட்டுள்ளது.