சென்னை

மூன்றாம் பாலினக் குழந்தைகள் தங்க அரசு சார்பில் திருச்சி நகரில் விடுதி ஒன்று அமைக்கப்பட உள்ளது.

                                                                            மாதிரி புகைப்படம்

மனித இனத்தில்  மூன்றாம் பாலினமாகக் கருதப்படும் திருநங்கை மற்றும் திருநம்பிகள் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களாக நடந்துக் கொள்வார்கள். இந்த மனநிலை அவர்களுக்கு சிறு குழந்தைகளாக இருக்கும் போதே உண்டாகிறது. இவ்வாறு தங்கள் குழந்தைகள் மூன்றாம் பாலினம் எனத் தெரிய வரும் போது பல பெற்றோர்கள் இந்த குழந்தைகளை வீட்டை விட்டு விரட்டி விடுகின்றனர்.

இந்த குழந்தைகள் தங்கள் பிழைப்புக்காக பிச்சை எடுத்தல் அல்லது பாலினத் தொழில் செய்தல் என்னும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகள் தங்க ஒரு விடுதியும் பள்ளியும் திருச்சி நகரில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இது போல ஒரு பள்ளியை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான பாபு நடத்தி வருகிறார். இந்த பள்யின் பெயர் சுவாமி சிவானந்தா வித்யா சமிதி ஆகும்.

இது குறித்து பாபு, “பிரியா என்னும் திருநங்கை அவரது 15 ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை நான் சந்தித்த பிறகு இவ்வாறு ஒரு பள்ளியை நிறுவும் எண்ணம் எனக்கு வந்தது. இந்தப் பள்ளியில் நாங்கள் அவர்கள் 18 வயதாகும் வரை பொறுப்பு ஏற்கிறோம். அப்போது நாங்கள் அவர்களை மன ரீதியாக, மருத்துவ ரீதியாக, மற்றும் சட்ட ரீதியாக தனித்து இயங்க தைரியம் அளிக்கிறோம். அதன் பிறகு அவர்கள் விரும்பினால் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.