முன்னாள் எம்பி குழந்தைவேலு மனைவி கொலை வழக்கில் மகன் கைது!

Must read

சென்னை

திமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி, கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான அவரது மகன் பிரவீன் 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு டில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.ஜி.ஆா். ஆட்சி காலத்தில் மாநில அமைச்சராக பொறுப்பு வகித்தவா் குழந்தைவேலு. மேலும் இவா் 1984-89ம் ஆண்டுகளில் கோபிச்செட்டிப் பாளையம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தாா். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவா் உயிாிழந்துவிட்ட நிலையில், அவரது மனைவி ரத்தினம் மட்டும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தாா்.  இவர் கடந்த ஏப்ரல் மாதம்  14-ம் தேதி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய  விசாரணையில், ரத்தினத்தை அவரது மகன் பிரவீனே  கொலை செய்திருந்தது தெரிய வந்தது.  வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த பிரவீன், கடந்த மார்ச் மாதம் சென்னை திரும்பிய நிலையில், தனது தாயிடம் சொத்தை எழுதிக்கேட்டு தகராறு செய்து வந்தாகவும், சம்பவத்தன்று, தாய்க்கும் மகனுக்கும் இடையே கடுமையான சண்டை மூண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரத்தில், தனது தாயை கத்தியால் குத்திய பிரவீன், அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார்.

தாயை கொலை செய்தது பிரவீன்தான் என்று, திருப்பூரில் வசித்து வரும், ரத்தினத்தின் மகள்  சுதா, போலீசில் புகார் அளித்தார். கொலைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், ரத்தினம் தனக்கு போன் செய்ததாகவும், சொத்து கேட்டு தன்னை சித்திரவதை செய்வதாகக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

புகாரின் பேரிலும், அங்கிருந்த கிடைக்கப்பெற்ற சிசிடிவி புட்டேஜ்கள் மூலம் கொலையாளி பிரவீன் என்பதை உறுதி செய்த காவல்துறையினர் அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையில் பிரவீனுக்கு உதவி செய்ததாக அவரது கார் டிரைவர் மற்றும் அவரது மனைவியும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

இந்த நிலையில் டில்லியில் அருணா நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பிரவீனை காவல்துறையினர் கைது செய்தனர்.

More articles

Latest article