சென்னை
தற்போது அமலாக்கப்பட்டுள்ள புதிய மோட்டார் வாகன சட்ட அபராதக் கட்டணங்களை தமிழக அரசு குறைக்க முடிவெடுத்துள்ளது.
ஆண்டு தோறும் நாடெங்கும் சராசரியாக 1.4 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். இவ்வாறு மரணம் அடைவதைக் குறைப்பது, ஓட்டுநர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களுடன் மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல் படுத்தியது. இந்த புதிய சட்டத்தின்படி அபராதங்கள் கிட்டத்தட்ட 10 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மத்திய அரசு இந்த போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதங்களை மாநில அரசு முடிவெடுக்கலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அபராதத் தொகை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அவ்வாறு குறைப்பது குறித்து போக்குவரத்து துறை ஆய்வு நடத்தியது.
ஆய்வின் முடிவில் அபராதம் குறைப்பு குறித்து அறிக்கை ஒன்றை தயாரித்து போக்குவரத்துத் துறை தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. தமிழக அரசு இந்த அறிக்கையைப் பரிசீலித்து வருவதாகவும் இன்னும் 2 வாரங்களில் அபராதம் குறைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.