சென்னை
ஐந்து சவரர்களுக்குக் கீழ் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியாகும் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகக் கூட்டுறவுச் சங்கங்களில் 5 சவரர்களுக்குக் கீழ் பெற்றுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொன்றாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இதுவரை நிறைவேற்றாத வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இன்று தமிழக கூட்டுறவுச் சங்க பதிவாளர் அலுவலகத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களிடம், “ஐந்து சவரர்களுக்குக் கீழ் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியிடப்படும்.இந்த நகைக்கடன் தள்ளுபடியால் சுமார் 11 லட்சம் பேர் பயனடைவார்கள்.
மேலும் 15 கூட்டுறவு சங்கங்களில் சுமார் 12 கோடி ரூபாய் முறைகேடு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னும் 6 மாதங்களுகுள் 4,450 விவசாய கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினிமயம் ஆக்கப்படும். கூட்டுறவுத் துறையில் வெளிப்படைத் தன்மையுடன் பணியாளர்கள் நியமிக்கப்படுவர் ” எனத் தெரிவித்துள்ளார்.