சென்னை
தமிழக முதல்வர் கார் மோதி மரணமடைந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புறநகரான வண்டலூர் ஒயர்லெஸ் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பிரசன்னா என்பவர் பணி புரிந்து வந்தார். அவர் கடந்த 18 ஆம் தேதி காமராஜர் சாலையில் உள்ள தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து சாலையைக் கடக்கும் போது கார் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவர் குடும்பத்துக்குத் தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“வண்டலூர் வயர்லஸ் காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஜி. பிரசன்னா அவர்கள் 18.10.2021 அன்று இரவு 8.00 மணியளவில் தமிழ்நாடு காவல்துறை தலைமையிடத்தில் இருந்து காமராஜர் சாலையைக் கடக்கும்போது அதிவேகமாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் திரு.ஜி.பிரசன்னா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்”
எனத் தெரிவித்துள்ளார்.