சென்னை
தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசுப் பணி நியமனத்தில் ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2250 கிராம சுகாதார செவிலியர்களை நியமனம் செய்வது குறித்து ஒரு அறிவிப்பைத் தமிழக அரசு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த நியமனத்தின் போது கொரோனா காலத்தில் பணி புரிந்த செவிலியர்களுக்குச் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையொட்டி அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும்கொரோனா நல மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என்றும், 6 முதல் 12 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 2 மதிப்பெண், 12 முதல் 18 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 3 மதிப்பெண் வழங்கத் தமிழக அரசு அரசாணை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் 18 முதல் 24 மாதம் வரை பணியாற்றியவர்களுக்கு 4 மதிப்பெண், 24 மாதங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.