சென்னை

மிழக நீர்நிலைகள் நிலை குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன.   இந்த விசாரணை தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவுலு ஆகியோரின் அமர்வின் கீழ் நடந்தது.  அப்போது நீதிபதிகளின் அமர்வு தெரிவித்ததாவது :

உலகுக்கு தண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது. தொடர் மழை காரணமாக தற்போது சென்னையின் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டும் 4 மாதங்கள் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.  எனவே தற்போதுள்ள அனைத்து வழக்கிலும் தொடர்புடைய ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும். இதை நீதிமன்றம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும்” என்றனர்.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.   அந்த மனுவில் “உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 9,802 நீர்நிலை ஆக்கிரமிப்புக்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,178 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 210 நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையொட்டி நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிட நேரிடும்,” என எச்சரித்துள்ளனர்.