சென்னை:

மிழ்நாட்டில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், 4 மாதத்தற்குள் அனைத்து பணிகளும் முடித்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

முதல்வர், அமைச்சர்கள் உள்பட  மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா கொண்டுவரும் வகையில் லோக்பால் சட்டம் ஏற்கனவே மத்திய அரசால்  2013ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வழிவகை செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதி மன்றம் பலமுறை எச்சரிக்கை விடுத்த பிறகு, தமிழகத்தில் லோக்ஆயுக்தா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்ட மசோதா கடந்த ஆண்டு (2018) ஜூலை மாதம்  நிறைவேற்றப்பட்டது.

அதையடுத்து, லோக் ஆயுக்தாவின் செயலாளர், இயக்குநர், சார்பு செயலாளர் உள்ளிட்ட 26 பணியிடங்களுக்கான அறிவிப்பை  தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இந்த 26 பணியிடங் களுக்கான தகுதி வாய்ந்த நபர்களை லோக் ஆயுக்தாவின் தலைவர் தேர்வு செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டு அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

ஆனால்,  இதுவரை லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை. இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் தரப்பில் விளக்கம் தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,   “லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன. உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி மட்டுமே தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணியும் விரைவில் முடிந்துவிடும். எனவே 8 வார கால அவகாசம் வேண்டும்” என்று கோரப்பட்டு இருந்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதி மன்றம், லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்துக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்றும்,  அடுத்த 4 மாதத்துக்குள்  லோக் ஆயுக்தா பணிகள் முழுவதும் நிறைவடைந்து செயல்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.