சென்னை

மிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்பதைக் கைவிடவில்லை எனச் சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று நாடெங்கும் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடைபெறௌள்ளது.   தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக அறிவித்துத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.    இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களிடம், ”தமிழக மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும்.   தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.  திமுகவின் உறுதியான கொள்கையான நீட் தேர்வு நடத்தக்கூடாது என்பதை  எப்போதும்  கைவிட மாட்டோம்.

நாளை நீட் தேர்வு ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளைக்கு விசாரணைக்கு வரும் வழக்கைப் பொறுத்து நீட் விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுக்கும்.    ஆயினும் மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து வருகிறது.

மொத்தமாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும்.  தமிழக மாணவர்களை அரசு கைவிடவில்லை.  எனவே அரசு நம்மைக்  கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் மாணவர்களுக்கு வரக்கூடாது,  அதற்காகவே நீட் பயிற்சி அளித்துவருகிறோம்” எனத் தெரிவித்தார்.