சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு ரத்து எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. முன்னதாக இதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் பல சமூகத் தினர் வாழ்ந்து வரும் நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் அதிக அளவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது மற்ற சமுகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தமிழகஅரசின் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசாணையை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது. இது வன்னிய இன மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல இடங்களில் போராட்டங்களும் நடை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்பது என்னுடைய கோரிக்கை. ஏனென்றால், சமூகநீதியை போற்றுகின்றோம், சமூக நீதியை காக்கக்கூடிய அரசு என்று சொல்லக்கூடிய திமுக அரசு, அனைத்து சமுதாய மக்களுக்கான சமூக நீதியை காக்க வேண்டும். உள் இட ஒதுக்கீடை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.
இதுதொடர்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்திருக்கிறேன். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அனைத்து சமுதாய மக்களுக்குமான அரசாக இருந்தது. ஆனால் எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையிலான அரசு ஒரு குறிப்பிட்ட சாதிக்கான அரசாக மாறி விட்டது. தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் மீண்டும் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்கின்ற பதவி ஆசையில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு மட்டும் வாக்கு வங்கிக்காக மற்ற மக்களை வஞ்சித்து அந்த அவசர சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
ஆனால் அதற்கு தக்க பதிலடியை நீதிமன்றம் வழங்கியுள்ளது. எல்லா சமுதாய மக்களுக்குமான அரசாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக இந்த அரசு மேல்முறையீடு செய்யாது என்று நம்புகிறேன். குறிப்பிட்ட சமுதாயத்திற்கான ஒரு அரசாக இந்த அரசு மாறிவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டபோது, கருணாஸ் கடுமையாக எதிர்த்தார். வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி னால் எங்களுக்கும் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.