மிக்ஜாம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணை இன்று வெளியானது.

தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து யாரு யாருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களும்;

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் தாலுக்காவில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் மற்றும் மூன்று கிராமங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் தாலுகா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவில் மூன்று கிராமங்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் தாலுகாக்கள் ஆகிய இடங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண நிதி ரொக்கமாக வழங்கப்படும்.

இதற்கான டோக்கன் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மாநில அரசாங்கங்களின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் உடைகள்/ பாத்திரங்கள்/ வீட்டுப் பொருட்களை இழந்திருந்தால், தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களுடன் நியாயவிலைக் கடையில் விண்ணப்பிப்பதன் மூலம் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.