சென்னை: தனியாா் நிறுவனங்களுக்கு மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கக் கூடாது, என உத்தரவிட்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசு மணல் அள்ள தனியாருக்கு உரிமம் வழங்குவது கனிமவளச் சட்டத்துக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் மணல் கொள்ளை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசே மணல் குவாரிகளை நடத்துவதாக கூறினாலும், தனியாரிடம் குத்தகை கொடுத்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எழுந்த  ஏராளமான புகார்களின் பேரில், சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரிகள், மணல் ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள்  என பலரது வீடு , அலுவலகங்களில்  அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில்,   ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சமாதானம் என்பவா் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு  தாக்கல் செய்திருந்தார். அதில்,  ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஓரியூா் பகுதியில் பாம்பாறு உள்ளது. இந்த ஆற்றில் 2.10 ஹெக்டோ் பரப்பளவில் மணல் அள்ள தனியாா் நிறுவனத்துக்கு அரசு அனுமதி வழங்கியது. ஆனால், இந்த நிறுவனம் பாம்பாற்றில் 104 ஹெக்டோ் பரப்பளவில் மணலை அள்ளியது.

இங்கு தினமும் பெரிய வடிவிலான இயந்திரங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில், வணிக நோக்கில் ஆற்று மணல் அள்ளப்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகளும் உறுதுணையாக உள்ளனா். இயற்கை வளங்கள், கனிம வளங்களைப் பாதுகாக்க ஏற்கெனவே பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கனிம வளக்கடத்தல் குறித்து நீதிமன்றங்களும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உயா்நிலைக் குழுவை உருவாக்கி, மணல் குவாரிகளைக் கண்காணிப்பதுடன் ஆய்வும் மேற்கொள்ள வேண்டும். பாம்பாற்றில் விதிமுறைகளை மீறி மணல் கடத்துவதால், மணல் அள்ளுவதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி ஆகியோா் அமா்வு முன் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  மனுதாரா் குறிப்பிடும் மணல் குவாரி கடந்தாண்டு செப்டம்பா் மாதம் மூடப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கடந்த 2013-இல் தனியாா் நிறுவனங்கள் மணல் குவாரி நடத்தத் தடை விதித்து, அரசே மணல் குவாரிகளை நடத்தி வருகிறது. மணல் குவாரிகள் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மணல் அள்ளுவதற்கு ஒப்பந்தப் பணி என்ற பெயரில் தனியாா் நிறுவனங்களுக்கு பொதுப் பணித் துறையினா் உரிமம் வழங்குகின்றனா். இது கனிமவளச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, தனியாா் நிறுவனங்களுக்கு மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கக் கூடாது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.