சென்னை: தலைநகர் சென்னையில் திருவிக நகரில் காணப்படும் கொரோனா பாதிப்பால் கவலை கொண்டுள்ள அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் ஓயவில்லை. 100, 200 என்று தினமும் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது 400, 500 என அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று 14,195 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,409 ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் அதிக பாதிப்புகள் இருக்கின்றன. குறிப்பாக திருவிக நகரின் கொரோனா பாதிப்புகள் அதிகாரிகளை கவலை கொள்ள செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவிக நகர்(மண்டலம் 6) பகுதியில் 223 கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதாவது, இவர்கள் அனைவரும் 77வது வார்டில் (புளியந்தோப்பு) அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னை மாநகராட்சிகளில் பதிவாகும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையானது 20 வார்டுகளில் இருந்து அதிகமாக காணப்படுகிறது. இது தான் அதிகாரிகளை அதிகம் கவலை கொள்ளச் செய்துள்ளது.
அதே நேரத்தில், வடசென்னையில் முக்கிய அடையாளமான தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள கேசி சங்கரலிங்க நாடார் கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையில் உள்ள மற்ற கல்லூரிகளான லயோலோ, வைஷ்ணவ கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, கன்னிகா பரமேஸ்வரி கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.