சென்னை

மிழக அரசை டாஸ்மாக் வருமானத்தில் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.

இன்று சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் உள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.  தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம், “திமுக ஆட்சி அமைந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆயினும், சில பத்திரிகைகள், தமிழக அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது.

தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம்  இல்லை .

இங்குள்ள கடையைப் பொறுத்தவரையில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இயந்திரம் செயல்படுகிறது. தவிர டாஸ்மாக் கடையும் அந்த நேரத்தில் மட்டும்தான் இயங்கும். இதை 24 மணி நேரம் பயன்படுத்தலாம், கடைக்கு வெளியே உள்ளது. ATM-ஐ உடைத்து எடுப்பது போல் இதனை உடைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று எல்லாம் தவறான செய்தியைப் பரப்புகின்றனர்.

தானியங்கி இயந்திரம் இந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது வெளியேவா, 24 மணி நேரமும் எடுக்க முடியுமா என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள். 21 வயதுக்குக் குறைவுடைய யாராவது இதில் மது வாங்க முடிகிற அளவுக்கு உள்ளதா? இந்தக் கடை எங்கு உள்ளது, எப்படிச் செயல்படுகிறது என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள். எனத் தெரிவித்துள்ளார்.