சென்னை
தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் குறைந்த பட்ச நில விலை நிர்ணயம் செய்துள்ளது.
தமிழகத்தில் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்குச் சதுர அடியிலும் வழிகாட்டி மதிப்புகள், நிர்ணயம் செய்யப்படுகின்றன. இப்படி நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிகக் குறைவாக உள்ளன. இந்த மதிப்பின் அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்குவதால், மனை நிலம் வாங்குபவர்கள் வங்கிகளில் தேவையான அளவிற்குக் கடன் பெற முடியாத நிலை உள்ளது.
கடந்த 16.8.2023 அன்று இதை தவிர்ப்பதற்காகவும், வழிகாட்டியில் குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயம் செய்வதற்காகவும் மைய மதிப்பீட்டுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு விரிவான விவாதத்திற்குப் பின் சொத்து அமைந்துள்ள பகுதிகளைப் பொறுத்து குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சியில் குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பு சதுர அடிக்கு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவடி, தாம்பரம், ஓசூர், காஞ்சீபுரம் மாநகராட்சி – சதுர அடிக்கு ரூ.800;
ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சி – ரூ.700;
திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர். கரூர் மாநகராட்சி – ரூ.600;
தூத்துக்குடி, தஞ்சாவூர். சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சி – ரூ.500;
கடலூர் மாநகராட்சி – ரூ.400;
நகராட்சி, பேரூராட்சி பகுதிகள்
அனைத்து நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மனையிடங்களுக்குக் குறைந்தபட்ச மதிப்பு – ரூ.300
அனைத்து பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களுக்குக் குறைந்தபட்ச மதிப்பு – ரூ.200
காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு – ரூ.100; குறைந்தபட்ச விவசாய மதிப்பு – ஏக்கருக்கு ரூ.5 லட்சம்.
இதர மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், அந்த மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு – சதுர அடி ரூ.50; குறைந்தபட்ச விவசாய மதிப்பு – ஏக்கருக்கு ரூ.2 லட்சம்.
என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகள், இணையதளத்தில் நேரடியாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.