திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்ட செந்தூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு ஸ்ரீவைகுண்டம் வந்தபோது கடும்மழை காரணமாக நிறுத்தப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரயில்வே தண்டவாளத்தின் அடியில் இருந்த மணல் மற்றும் ஜல்லி கற்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால் தண்டவாளம் மட்டும் அந்தரத்தில் தொங்கியதால் ரயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
800 பயணிகள் பயணம் செய்த இந்த ரயில் நடுவழியில் கடும்மழையில் நிறுத்தப்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் இரவு முழுவதும் ரயிலுக்குள்ளேயே காத்திருந்தனர்.
இன்று காலை பொழுது விடிந்தபோது சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருப்பதைப் பார்த்து செய்வதறியாது திகைத்தது நின்றனர்.
இதனையடுத்து அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில் இன்று பிற்பகல் முதல் அவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
படகு மூலம் சென்று அவர்களை மீட்க முயற்சி கொண்டனர் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் இருந்ததை அடுத்து ஒரு சிலரை மட்டுமே மீட்டு அருகில் உள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க முடிந்த நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து பயணிகள் அனைவரும் ரயில்நிலைய நடைமேம்பாலத்தில் தஞ்சமடைந்தனர்.
இவர்களை மீட்க டிராக்டர்கள் மற்றும் ஜெ.சி.பி. உதவியை நாடியுள்ள நிலையில் நாளை காலை மீண்டும் அவர்களை மீட்கும் முயற்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ள ரயில் பயணிகளை மீட்பது குறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் இன்று மாலை ஆலோசனை நடத்தியுள்ளனர்.