சென்னை
வெளிநபர்கள் யாரும் நியாயவிலைக்கடைகளில் இருக்கத் தமிழக அரசு தடை விதித்து உத்தரவு இட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஒரு சில இடங்களில் விற்பனையாளர்கள் மற்ற ஊழியர்கள் தவிர வெளிநபர்கள் அமர்ந்துள்ளது சகஜமாக உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் இதனால் தங்களுக்குத் தொல்லை நேர்வதாக புகார் அளித்துள்ளனர். இதையொட்டி தமிழக அரசின் கூட்டுறவுச் சங்க பணியாளர் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் காணப்படுவதாவது :
- நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஒரே கடையில் தொடர்ந்து பணி புரிவதால் அவர்களுக்குத் தொடர்புடைய வெளி நபர்கள் கடைகளில் இருக்கின்றனர். இதனால் பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் தொல்லையைச் சந்திக்கின்றனர். ஆகவே நியாயவிலைக்கடை பணியாளர்கள் 3 வருடங்களுக்கு மேல் ஒரே கடையில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு இருப்போர் உடனடியாக வேறு கடைகளுக்கு மாற்றப்படுவர்
- சம்மந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வெளி நபர்கள் நியாயவிலைக்கடையில் இருந்தால் இது குறித்து புகார்கள் அளிக்கலாம். அவர்கள் மீது காவல்துறையினர் கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- மேற்குறிப்பிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் வெளிநபர்களைக் கடையில் அனுமதிக்கும் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மீதும் எடுக்கப்பட வேண்டும்.
- இது குறித்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் விவாதித்து தேவையான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுக்க வேண்டும்.
- இதற்கு பிறகும் நியாயவிலைக்கடைகளில் வெளி நபர்கள் இருப்பதாகப் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளரே பொறுப்பு எனக் கருதி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Patrikai.com official YouTube Channel