சென்னை

ண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்ட கல்லூரிகள் இணைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வருகிறார்.  இன்று சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பொன்முடி, “அதிமுகவால் தொடங்கப்பட்ட ஜெ. பல்கலைக்கழகம் தனித்துச் செயல்பட முடியாது. இதற்கு முன்னாள் தாலுகா அலுவலகத்தில் தான் ஒரு பெயர்ப் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஜெ.சட்டப்பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்ததைத் தவிர நிதி ஒதுக்கீடோ வேறு ஏற்பாடோ செய்யப்படவில்லை.

இந்த ஜெ.சட்டப் பல்கலைக்கழகத்துக்குத் துணை வேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டு உள்ளார். ஜெ. பல்கலைக்கழகத்துக்குப் பதிவாளரோ, வேறு அதிகாரிகளோ நியமிக்கப்படவில்லை. தவிர  ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

விரைவில் அண்ணாமலை பல்கலைக்கழகம் கூட்டுப் பல்கலைக்கழகமாக உருவாக்கப்படும். அப்போது விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கப்படும்.

மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட கல்லூரிகளை இணைக்கும் திட்டம் உள்ளது.  கல்வித்துறையின் நிதிநிலையைப் பொறுத்து அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.