கடலூர்: கடலூர் தொகுதியில் போட்டியிடும்  பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடுஅரசின் இந்த நடவடிக்கை கேலிக்குரியதாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மக்களவைத் தேர்தலில் பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.  அதன்படி,  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளராக  இயக்குநர் தங்கர்பச்சான் களமிறக்கப்பட்டு உள்ளார். இவர் அந்த பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.  பிரசாரதின்போது, நேற்று  (திங்கட்கிழமை) கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பகுதிகளில் அவர் தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த கிளி ஜோசியரிடம் தனக்கு ஜோசியம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி, கிளி ஒவ்வொரு அட்டையாக எடுத்து போட்டு இறுதியாக ஒரு அட்டையை ஜோசியரிடம் கொடுத்தது. அதில், அழகுமுத்து அய்யனார் சுவாமியின் படம் வந்ததையடுத்து, வெற்றி உங்களுக்கு என்று ஜோசியர் கூறினார்.

இதனால், தங்கர் பச்சான் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, ஜோசியம் பார்த்த கிளிக்கு தங்கர் பச்சான் வாழைப்பழத்தை உணவாக ஊட்டி விட்டு அங்கிருந்து சென்றார். அப்போது, அப்பகுதியில் இருந்த திருநங்கைகள் அவருக்கு திருஷ்டி சுத்தி போட்டு வழி அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ வைரலானது.

இந்த நிலையில்,  அந்த கிளி ஜோசியரை வனத்துறை கைது செய்துள்ளது.  கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம்  என்பதால், அவரை கைது செய்துள்ளதாக தமிழக அரசு கூறி உள்ளது.

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கானோர் கிளி ஜோதியம் பார்த்து, தங்களது வாழ்வாதரத்தை பேணி வருகின்றனர். மக்கள் கூடும் இடங்கள், பண்டிகை நாட்கள், கோவில்களின் அருகே மற்றும் சந்தை பகுதிகளில் கிளி ஜோசியம் பார்த்து வருகின்றனர். இன்றளவும் பல பகுதிகளில் கிளி ஜோசியம் பார்க்கப்படுகிறது. அதை பொதுமக்கள் நம்புகின்றனர்.  ஆனால், அரசு,   அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில்  அரசு நடவடிக்கை எடுத்துள்ளது  விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகவும், கேலிக்குறியது என்றும் சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.