சென்னை
தமிழக அரசு நெல் விளையும் நிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய நடமாடும் நிலையங்களை அமைக்க உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தெற்கு தமிழகத்தில் பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகியதாக செய்திகள் வெளியாகின. இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் மழையில் நெல் வீணாகாமல் தடுக்க அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை கேட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முக சுந்தரம் ஆஜரானார். அவர் அரசின் அறிக்கையைத் தாக்கல் செய்தார் இந்த அறிக்கை தமிழக நுகர்பொருள் வாணிக கழக நிர்வாக இயக்குநர் வி ராஜாராமன் அளித்திருந்தார்.
அதில் கழகம் நெல் கொள்முதலை நேரடியாக விளை நிலங்களுக்கே சென்று நடத்த உள்ளதாகவும் அதற்காக நடமாடும் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இதன் மூலம் நெல் மழையில் நனையும் முன்பே கொள்முதல் செய்யப்பட்டு பயிர்கள் பாழாகாமல் தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு விசாரணையை ஜூலை 15க்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதற்கு முன்பு மாநிலத்தில் உள்ள 282 கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் நெல்லை எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது. இதனால் மழையில் நெல் நனையும் அபாயம் இருந்தது. மேலும் விவசாயிகள் இதற்கான போக்குவரத்துச் செலவு, எடை கூலி ஆகியவை செலுத்தி வந்தனர். தற்போதைய ஏற்பாட்டினால் இந்த செலவுகள் இனி விவசாயிகளுக்கு இருக்காது எனத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]