சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த, சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. 69% இடஒதுக்கீடு சட்டம் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. அரசியலமைப்பு சட்ட விதி களின் படியே, 10.5% உள் இடஒதுக்கீடுக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது என அதில் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இது தொடர்பான அரசாணையை திமுக அரசு வெளியிட்டு, நடப்பாண்டில் சட்டல் அமலுக்கு வரும் என அறிவித்தது.
முன்னதாக, வன்னியர்களுக்கு மட்டும் 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து மற்ற சமூகத்தினர்கள் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், “சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தர விட்டது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில், 10.5 சதவீத உள் இடஒதுக்கீடால் தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தரவுகளை பெற்றே அரசமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டே வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.
மேலும், வன்னியர் உள்ஒதுக்கீட்டால், பிறபடுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற சமூகங்கள் பாதிக்கப்படுவர் என்பது உண்மையல்ல, இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்கள் சட்டப்படி விசாரிக்க ஏற்கதக்கதல்ல, அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளது.
இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.