சென்னை: குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகஅரசு, ‘கவிமணி’ விருது வழங்குவதாக அறிவித்து உள்ளது. அத்துடன் 25ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என பேரவையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நேற்று நடைபெற்று வருகின்றன. நேற்று (26ந்தேதி) பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, பள்ளிக்கல்வி துறையின் கொள்கை விளக்க குறிப்பில், 18வயதிற்கு உட்பட்ட சிறார்களின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன்  ‘கவிமணி’ விருது வழங்குவதாக அறிவித்து உள்ளது.

தமிழக அரசின் அறிவிப்புக்கு கல்வி ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு கவிமணி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கேற்றாற்போல பலருக்கு  தாய்மொழியில் பற்றில்லாத அவலங்களும் உள்ளது. இந்த நிலையில், கவிமணி என்பவர் யார் என்பது குறித்த தகவல்கள் வாசகர்களுக்காக  தொகுக்கப்பட்டு உள்ளது.

குமரி மாவட்டத்திலுள்ள  தேரூர் என்று கிராமத்தில் பிறந்து வாழ்ந்த கவிஞர் மற்றும் ஆசிரியர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இவர் 1876ம் ஆண்டு ஜூலை 27ந்தேதி பிற்நதார். 1954ம் ஆண்டு  செப்டம்பர் 26 அன்று தனது 78 வயதில் காலமானார்.  1901ம்  ஆண்டு உமையம்மை எனும் பெண்ணை மணம் முடித்தார். குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.

எம்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

ஆசிரியரான இவர் குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள் மட்டுமின்றி, ஏராளமான பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், , வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், மட்டுமின்றி பழந்தமிழ்ப்பண்பும், தமிழ்மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார்.

கவிமணியின் பாடல்களில்  நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைவழிபாடு, சாதிபேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று அதிகரித்து காணப்படும். 

மேலும் எட்வின் ஆர்னால்டின் ‘ஆசிய ஜோதி’,  பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். இதுமட்டுமின்றி பல திறநாய்வு கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.   1922-ம் ஆணடு ‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். ‘காந்தளூர்ச்சாலை’ பற்றிய ஆய்வு நூலை எழுதினார். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

 1940ம்ஆண்டு டிசம்பர் 24ந்தேதி அன்று   சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை  தேசிய விநாயகம் பிள்ளைக்கு  ‘கவிமணி’ என்ற பட்டம் வழங்கினார். அன்றுமுதல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

1954ம் ஆண்டு தனது 78 வயதில் மறைந்த  கவிமணிக்கு, அப்போதைய தமிழக அரசால்,  தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.

அவரை கவுரப்படுத்தும் வகையில், அக்டோபர் 2005ம் ஆண்டு  இந்திய அரசு முத்திரை (Stamp) வெளியிட்டுச் சிறப்பித்தது.

கவிமணியின் எழுதிய முக்கிய நூல்கள்

  • அழகம்மை ஆசிரிய விருத்தம்
  • குழந்தைச்செல்வம்
  • தேவியின் கீர்த்தனங்கள்
  • ஆசிய ஜோதி  (1941)
  • மலரும் மாலையும், (1938)
  • மருமக்கள்வழி மான்மியம், (1942)
  • கதர் பிறந்த கதை, (1947)
  • உமார் கய்யாம் பாடல்கள், (1945)
  • கவிமணியின் உரைமணிகள்
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குழந்தைகளுக்காக குழந்தைச் செல்வம் என்ற பெயரில் அழகிய பாடல்களை கொண்ட நூலை எழுதினார். இதில் உள்ள பாப்பாப் பாட்டுக்களைத்தான்  முந்தைய காலத்தில், பெற்றோர்கள் குழந்தை வளர்ப்புக்கு பாடி வந்தனர். அழும் குழந்தைகளை தாலாட்ட மட்டுமின்றி, குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான கருத்துக்களை உணர்த்தும் வகையிலே பாடி வளர்த்தனர். அந்த பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் முந்தைய தலைமுறையினர் பெரும் அறிந்ததிருந்ததே. இன்றுவரை அவர்களின் மனதில்  பசுமரத்தாணி பதித்து இருப்பதை மறுக்க முடியாது.
கவிமணி பாடல்களில் மிகவும் சிறப்பான பாடல்,  “தோட்டத்தில் மேயுது”  குழந்தை பாடல்.. அந்த பாடல் வரிகளை இங்கே பார்க்கலாம்…
தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசு-அங்கே
துள்ளிக் குதிக்குது.
கன்றுக் குட்டி
அம்மா என் குது,
வெள்ளைப்பசு-உடன்
அண்டையில் ஓடுது
கன்றுக் குட்டி
நாவால் நக்குது
வெள்ளைப்பசு-பாலை
நன்றாய்க் குடி க்குது,
கன்றுக் குட்டி.
முத்தம் கொடுக்குது,
வெள்ளைப்பசு-மடி
முட்டிக் குடிக்குது
கன்றுக்குட்டி.

இந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. சுதந்திர  போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தபோதும்கூட இவருடைய கவிதைகளில் அமைதியும், இனிமையும் இழையோடிக் கொண்டிருந்தது.வெண்பாக்களின் வழியாகச் சொல்ல வந்ததை எளிமையாகவும், தெளிவாகவும் கையாண்டவர்,

பழந்தமிழ்ப்பண்பும், தமிழ்மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பே “மலரும் மாலையும்” . இந்நூலில்,  நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைவழிபாடு, சாதிபேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று ஆகியவை குறித்து அருமையான பாடல்களை அறியலாம். மேலும் சாதி துவேசத்தை கண்டித்தும் பாடல்களை எழுதியுள்ளார்.

அதுபோல, கவிமணியின் ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது குமரி மாவட்டத்தை கட்டுப் படுத்தி வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சமூக சீர்கேட்டுக்கு எதிராக கடுமையாக சாடி எழுதியிருந்தார். பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற ஒரு புரட்சிக்காவியம் மருமக்கள் வழி மான்மியம் என்று புகழப்பட்டது.

குழந்தைகளுக்கான பாடல்களை கவிமணி அளவிற்கு இதுவரை வேறு எந்தவொரு கவிஞரும் பாடல் எழுதவில்லை என்பதே உண்மை. அப்பேற்பட்ட புகழுக்குரிய குழந்தை கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை கவுரவிக்கும் வகையிலேயே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, குழந்தை எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கவிமணி தேசிய விருது அறிவித்து உள்ளது.