டில்லி

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராகவும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சமீப காலமாக பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் நியமனம், ஆளுநர்கள் இடமாற்றம் ஆகியவற்றைச் செய்து வருவது நாம் அறிந்ததே.  சமீபத்தில் மணிப்பூர் மாநில ஆளுநராக இல கணேசன் நியமிக்கப்பட்டார்.  சில காலம் முன்பு  தெலுங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனுக்குப் புதுச்சேரி யூனியன் பிரதேச கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.

கடந்த 20 ஆம் தேதியுடன் பஞ்சாப் மாநில ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகி ஆகிய பதவிகளை வகித்த வி பி சிங் பட்னோர் பதவிக் காலாம் முடிவடைந்தது.   ஆகவே தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகி ஆகிய இரு பொறுப்புக்களையும் கூடுதலாகக் கவனிப்பார் என ஜனாதிபதி உத்தரவு இட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ஆவார்.  இன்னும் சில மாதங்களில் இவரது பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் இவருக்குப் பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் நிர்வாகி ஆகிய கூடுதல் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.  புரோகித் அசாம் மாநில ஆளுநராக ஏற்கனவே பணியாற்றியவர் ஆவார்.