டில்லி

மிழக ஆளுநர் ஆர் என் ரவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேற்று சந்தித்துப் பேசி உள்ளார்.

தமிழக ஆளுநராகப் பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.   அதன்பிறகு குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநராக ஆர் என் ரவியை நியமித்தார். பன்வாரிலால் புரோகித் முழு நேர பஞ்சாப் ஆளுநராக பொறுப்பேற்றார்.  ஆர் என் ரவி கடந்த 18 ஆம் தேதி அன்று தமிழக ஆளுநராகப் பதவி ஏற்றார்.

ஆர் என் ரவி பதவி ஏற்ற போது, தமக்கு அரசியலமைப்பு சட்டத்த்ஹில் அளிக்கப்பட்டுள்ள வரம்புகளுக்குட்பட்டு செயல்பட உள்ளதாகத் தெரிவித்தார்.  கடந்த 21 ஆம் தேதி அன்று அவர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை அழைத்து தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்துக் கேட்டு அறிந்தார்.  இது அரசியல் வட்டாரத்தில் பல ஊகங்களை எழுப்பியது.,

நேற்று காலை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி  டில்லிக்கு சென்றுள்ளார்.  அவர் தமிழக ஆளுநரான பிறகு முதல் முறையாக டில்லி சென்றுள்ளார்.  அவர் நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசி உள்ளார்.  இது மரபு அடிப்படையில் நடந்த சந்திப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர் இன்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சந்திக்க உள்ளார்.