கமலா ஹாரிசுக்கு புகழாரம் சூட்டும் மோடி

Must read

வாஷிங்டன்

மெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பலருக்கு உத்வேகம் அளிப்பதாக இந்தியப் பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி அந்நாட்டுத் துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்துப் பேசி உள்ளார்.  கமலா ஹாரிஸ் தமிழக வம்சாவளியினர் ஆவார்.  இருவரும் சந்திப்புக்கு பிறகு கூட்டாகச் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி உள்ளனர்.  இந்த சந்திப்பின் போது கமலா ஹாரிசுக்கு மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.

கமலா ஹாரிஸ், “கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்து தினமும் ஒருகோடி பேருக்கு தடுப்பூசி போடும் திறனை மேம்படுத்தியதற்கு இந்தியாவுக்குப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  உலக நாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவெடுத்ததை வரவேற்கிறேன்.

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடு இந்தியா ஆகும்.  இந்தியா பருவநிலை மாற்றம் குறித்து எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  இந்த நடவடிக்கைகளில் அமெரிக்கா இந்தியா ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயலாற்றினால் அது உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, “இந்தியா இரண்டாம் அலை கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது அமெரிக்கா உதவி செய்ததற்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.   கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டது உலகில்  ஒரு வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நிகழ்வு ஆகும்.

உலகில் உள்ள பலருக்கு கமலா ஹாரிஸ் உத்வேகம் அளிக்கும் ஒரு ஆதாரமாக விளங்குகிறார்.   அவர் வருகையை இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.  எனவே அவர் இந்தியாவுக்கு வர வேண்டும்.  இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு புதிய உயரங்களைத் தொடும்” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article