சென்னை: புழல் சிறை உள்பட தமிழக சிறைகளுக்குள் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், செல்போன், ஆயுதங்கள் காணப்படும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
சென்னை புழல் சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள கொலை வழக்கு கைதிகளான, பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செல்போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட சிறைக்காவலர்களை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். இதைத்தொடர்ந்து, இவர்களுக்கு உணவு கொடுக்கச் சென்ற கைதி பிரகாசையும் சிறையில் அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களின் வழக்கறிஞர்கள், சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தன. வழக்கின் விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ‘‘பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறி, இருவரின் உடல்நிலை குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் அளித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் புழல் சிறைக்குள் வந்தது குறித்து விசாரணை நடத்த உளவுப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.புகழேந்தி, ‘‘பிலால் மாலிக்கின் உடலில் கடுமையான காயங்கள் இருப்பதாகவும், பன்னா இஸ்மாயி்ல் மற்றும் பிரகாஷின் உடலில் லேசான காயங்கள் இருப்பதாகவும் அரசு மருத்துவமனை டீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, அவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், கைதிகள் மூவரும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வேலூர் சரக டிஐஜி-யின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 30-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.