சென்னை:

ல்வி நிலையங்கள் திறக்காத நிலையில், நீதிமன்ற உத்தரவை 100 % கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் பள்ளிகளின் விவரங்களை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது. அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கல்வியாண்டு தொடங்கியதால்,பல தனியார் கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கை நடத்தி ஆன்லைன் மூலம் கல்வி போதித்து வருகிறது. கல்விக்கட்டணத் தையும் உடனே செலுத்த வலியுறுத்தி வருகின்றன.

இதுதொடர்பான வழக்கில்,  தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்கள் 40 சதவீத கட்டணத்தை உடனேவும், 35 சதவீத கட்டணத்தை பள்ளி திறந்தவுடன் கட்ட சென்னை உயர்நீதி மன்றம் கடந்த ஜூலை 30ந்தேதி  உத்தரவிடட்டது.

ஆனால்,  உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, சில பள்ளிகள் முழு கட்டணத்தையும் மாணவர்களிடம் இருந்து வசூலிப்பதாக, தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் அன்னலட்சுமி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த விசாரணையின்போது முறையிட்டார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை மீறி இது போன்று பெற்றோர்களை நிர்பந்தப்படுத்தி முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை ஆகஸ்ட் 17ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,  நீதிமன்ற உத்தரவை மீறி 100 % கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் குறித்த விவரங்களை வரும் 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை அனுப்பவும்  கல்வித்துறை அதிகாரிகளுக்கு  மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.