சென்னை: கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது 5ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஊரடங்கை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான கூடுதல் நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: மண்டலங்களுக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. ஓரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலம் செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும்.
சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாகும். பரிசோதனைகள் முடிவில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர். கொரோனா இல்லை என்று தெரியவந்தால் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு அலுவல் ரீதியாக சென்று 48 மணி நேரத்தில் திரும்பும் நபருக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை. மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனம், பேருந்து, ரயில் பயணங்களுக்கு இ பாஸ் தேவையில்லை. வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் அவசியம்.
வெளிமாநிலங்களில் இருந்து வந்தாலே அறிகுறி இல்லாவிட்டாலும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்தில் இருந்து வருவோருக்கு பரிசோதனை கட்டாயமாகும். வெளிமாநிலங்களில் இருந்து வந்தாலே கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதிப்படுவர். கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தால் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.