சென்னை: தமிழகத்தில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாக இணையதளத்தில் பரவி வரும் தகவல் தவறானது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தளர்வுகள் பற்றி நாடு முழுவதும் உரிய வழிகாட்டுதல்ளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

தற்போது வரும் 30ம் தேதி 4ம் கட்ட தளர்வுகள் அமலில் உள்ளன. அதில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று சமூக வலைதளங்களில் செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகிறது என்று முதலமைச்சர் பெயரிலான அறிக்கை ஒன்று வலம் வந்தது.

இது குறித்து மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் இந்த தகவல்களை செய்தித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது.

அதேபோன்று, அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்பது தவறு என்று விளக்கம் அளித்துள்ளது. பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள் திறக்கப்படும் தேதி குறித்து தமிழக அரசு முறையான அறிவிப்பு வெளியிடும் என்று செய்தித்துறை விளக்கமளித்துள்ளது.