சென்னை: பெரிய வணிக வளாகங்கள், ஓட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, வணிக வளாகங்களில் பொதுமக்கள் 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அவசியம், கைகளை சோப்பு கொண்டோ அல்லது கிருமிநாசினியை கொண்டோ சுத்தம் செய்ய வேண்டும்.
அனைத்து கடைகள் நுழைவாயிலில் கிருமிநாசினி வைக்கப்பட்டு இருக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை அவசியம். நோய் அறிகுறி இல்லாத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கடையில் இருக்கும் முழுநேரமும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். வாடிக்கையாளர்களை பிரித்து கடைகளுக்குள் அனுப்ப வேண்டும்.
இதேபோன்று, ஓட்டல்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஓட்டல் சமையல் கூடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். காய்கறிகள், பருப்பு, அரிசி பொருட்களை நன்றாக சுத்தப்படுத்தி வைக்க வேண்டும்.
சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி உள்ளிட்டவற்றை சோப் கொண்டு கழுவிக் கொள்ள வேண்டும். சமையல் செய்பவர்கள் அதற்கான உடை, முகக்கவசம் அணிந்து, தலைமுடி மூடும்படி கவசம் மாட்டி இருக்க வேண்டும். சமையலறையின் தரை, அலமாரிகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிவித்துள்ளது.