வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Must read

சென்னை: வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, செப்டம்பர் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் ஆட்சியர்கள், மருத்துவ குழுவுடன் பரிந்துரைப்படி, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில், நாளை முதல் திறக்கப்படும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளதாவது: தனி மனித இடைவெளி மற்றும் முகக்கவசம் கட்டாயம் ஆகும். உடல் வெப்ப பரிசோதனை, காலணிகளை நுழைவு வாயில்களில் அவரவரே எடுத்து வைத்து விட்டு செல்ல வேண்டும். கைகளைக் கிருமி நாசினி கொண்டும், கால்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்த பின்னரே அனுமதி உண்டு.

கால அபிஷேகம், அர்ச்சனை, உபய கட்டண சேவைகள் போன்றவற்றில் பங்கேற்பதை தவிர்க்கவும். அர்ச்சகர்கள் பக்தர்களை தொட்டு பிரசாதங்களை வழங்க அனுமதி இல்லை. உண்டியலை தொட்டுவிடாமல்  குறிப்பிட்ட இடைவெளியில் இருந்து காணிக்கை செலுத்தலாம்.

கொடிமரம் உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து, விழுந்து வணங்குதல் போன்றவற்றை தவிர்க்கவும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழே உள்ளவர்கள், கர்ப்பிணிகள் வழிபாட்டுத் தலங்களுக்கு வர தடை, வழிபாட்டின் போது 6 அடி தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு உள்ளது.

More articles

Latest article