சென்னை

எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி தம்முடன் பொங்கல் பரிசு கொள்முதல் குறித்து விவாதத்துக்குத் தயாரா என உணவு அமைச்சர் சக்கரபாணி கேட்டுள்ளார்.

தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை எழுப்பின.   இந்த தொகுப்பில் உள்ள பல பொருட்கள் தரமற்று இருப்பதாகத் தெரிவித்தனர்.  மேலும் இந்த பொருட்கள் மிகவும் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் ரூ. 500 கோடி ஊழல் நிகழ்ந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் என்றும், தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நாக்கூசாமல் அப்பட்டமாக உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குக் குறுகிய காலத்தில் 21 பொருட்களைத் தரமாக வழங்க, உரிய முறையில் விலைப்புள்ளி கோரப்பட்டது. குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் உத்தரவு வழங்கப்பட்டது. அதன் பிறகு, அனைத்து பொருட்களும் தரமாக வழங்கப்படவேண்டும் என்று நானும், கூட்டுறவுத் துறை அமைச்சரும் அறிவுறுத்தினோம்.

பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஜன.11-ம் தேதி அதிமுகவினர் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்வதை ஆதாரத்துடன் தெரிவித்தேன். முதல்வரே சென்னையில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொருட்களின் தரம், விநியோகத்தை ஆய்வு செய்தார். சில இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதை மாற்றிக் கொடுத்ததுடன், அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் கடந்த பொங்கலுக்கு 20 கிராம் முந்திரிப் பருப்பு, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய 45 கிராம் பொருட்களுக்கு அவர்கள் ரூ.45 வழங்கினர். ஆனால் இந்த பொங்கலுக்கு, 50 கிராம் முந்திரிப் பருப்பு, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய் ஆகிய 110 கிராம் பொருட்களுக்கு ரூ.62 வழங்கப்பட்டுள்ளது.

இந்த 3 பொருட்களில் மட்டுமே ஒரு தொகுப்புக்கு ரூ.௪௮ குறைவாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த பொருட்களுக்கு ஏன் அதிகம் செலவழித்தனர் என்பதற்குப் பதில் கூற முடியாமல் எங்களை வசைபாடியுள்ளனர்.

கடந்த ஆட்சியின் இறுதியில் பருப்பு கிலோவுக்கு ரூ 120.50 என இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து நாங்கள், கிலோ ரூ.78 முதல் ரூ.86 வரையிலான விலையில் பருப்பு கொள்முதல் செய்தோம். திமுக ஆட்சியில் ஒப்பந்தப் புள்ளி கோருவது எளிமையாக்கப்பட்டு பலரும் பங்கேற்று அவர்கள் கொடுத்த விலைப்புள்ளியில் குறைந்தவற்றுக்குக் கொள்முதல் ஆணை வழங்கும் வெளிப்படையான நடைமுறை கொண்டு வரப்பட்டதால், ஒரு கொள்முதலில் ரூ.74.75 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கொள்முதல்களில் மட்டுமே இவ்வளவு பணத்தை மிச்சப்படுத்தியுள்ளோம்.

அபாண்டமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ள பழனிசாமி, பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் பற்றி என்னுடன் விவாதிக்கத் தயாரா? இல்லாவிட்டால் தவறான குற்றச்சாட்டுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.”

எனத் தெரிவித்துள்ளார்.