சென்னை
வரும் விஜயதசமி அன்று குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கப் பள்ளிக்கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
நவராத்திரியின் இறுதி நாள் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் விஜய தசமி ஆகும். எந்த ஒரு காரியத்தையும் அன்று தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்னும் ஒரு நம்பிக்கை உள்ளது. குறிப்பாக அன்று முதல் முதலாகப் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளைச் சேர்ப்பது வழக்கமாகும்.
பல நர்சரி பள்ளிகளிலும் அன்று விடுமுறை என்ற போதிலும் புதிய மாணவர்களைச் சேர்க்கத் தயாராக இருப்பது வழக்கமாகும். பல பெரிய பள்ளிகளிலும், சிறிய பள்ளிகளிலும் இந்த சேர்க்கை நடைபெறும். தற்போது அரசுப் பள்ளிகளிலும் நர்சரி வகுப்பான எல் கே ஜி மற்றும் யு கே ஜி தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி விஜயதசமி அன்று தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்குமாறு பள்ளிக்கல்வித்துறை பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த தினத்தன்று 3 வயது முடிந்த குழந்தைகளை எல் கே ஜி வகுப்பிலும் 5 வயதான குழந்தைகளை முதல் வகுப்பிலும் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.