திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாளப்பட்டி அருகே மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 20 லட்சம் பணத்துடன் அங்கித் திவாரி கையும் களவுமாக சிக்கினார்.

இதனைத் தொடர்ந்து காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்திய நிலையில் அவரது வீடு மற்றும் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ளும் அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே பலலட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளது தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 20 லட்சம் லஞ்சப்பணத்துடன் கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி… தட்டி தூக்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்