சென்னை: அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ஆட்சியாளர்களுக்கு ஏற்றார்போல பச்சோந்திகளாக மாறி வருகின்றனர் என நீதிபதி கடுமையாக விமர்சனம் செய்ததன் எதிரொலியாக, அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற  லஞ்ச ஒழிப்பு காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில்  கீழ் நீதிமன்றங்களால் தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டு வந்தது, பொதுமக்கள் மட்டுமின்றி நீதித்துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயர்நீதிமன்ற நீதி அரசர் வெங்கடேஷ்.  அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். அதுபோல அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்பட பலரது வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பொன்முடி வழக்கை விசாரணைக்கு எடுத்த  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  வெங்கடேஷ், கடந்த மாதம் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி பதிலளிக்க உத்தரவிட்டு,  வழக்கை ஒத்திவைத்திருந்தார். இந்த வாக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை ஏற்று வேறு நீதிபதிக்கு மாற்றுவதா அல்லது தானே விசாரிப்பதா என முடிவெடுக்கப்படும் என தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

வழக்கை தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்து யார் விசாரிப்பது என முடிவெடுக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

விசாரணைக்கு எடுத்த வழக்கில் தெரிவித்த கருத்துக்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக உள்ளது என பொன்முடி தரப்பில் கூறப்பட்டுள்ளது.  மேல்முறையீடு செய்ய அவகாசமுள்ளது, மேல்முறையீட்டுக்கு உகந்த வழக்கா என ஆய்வு செய்து வருகிறோம் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை செப்.14ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

ஆட்சியாளர்களுக்கு ஏற்ப விஜிலென்ஸ் துறை பச்சோந்தியாக மாறுகிறது! ஓபிஎஸ் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்…