சென்னை
இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க மத்திய அரசைக் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தி உள்ளார்
இலங்கை கடற்படை வெகுநாட்களாக எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து படகுகளைப் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் யாழ்ப்பாணம் காங்கேசன் துறை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வரும் ஏழாம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை இந்த படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கு செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த 2015-2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூரி ராமேஸ்வரம், மண்டபம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காங்கேசன் துறை, காரைநகர், தலைமன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த 105 படகுகளை வரும் பிப்ரவரி 7 முதல் 11 ஆம் தேதி வரை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது. பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவாதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
படகு ஏலத்தை நிறுத்துவதுடன் நம் மாநில மீனவர்களிடம் இந்த படகுகளைத் திருப்பி ஒப்படைக்கவும் உடனே மத்திய அரசு உரிய முயற்சிகள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்”
எனத் தெரிவித்துள்ளார்.