சென்னை: தமிழகஅரசின் நீட் உள்பட 13 மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கும் ஆளுநருக்கு எதிராக நாளை  காங்கிரஸ் கட்சி சார்பில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்க மறுத்து வருவதுடன், அதை குடியரசு தலைவருக்கும் அனுப்பாமல் இழுத்தடித்து வருகிறார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை நேரில் சென்று அறிவுறுத்தியும், கவர்னர் செவி சாய்க்காமல் இருப்பதால், ஆளுநருக்கு எதிராக தமிழகஅரசியல் கட்சிகள் கொந்தளித்துபோய் உள்ளனர். இதையடுத்து,  ஆளுநரின் பதவியின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மயிலாடுதுறை சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் உட்பட 13 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (ஏப்ரல் 28 ஆம் தேதி) மாலை 4 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.