சென்னை

த்திய அரசு வேளான் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.   இந்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கடந்த 6 மாதங்களாக டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   மத்திய அரசின் பிடிவாதத்தால் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையிலான பல கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரமாகக் கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடெங்கும் உள்ள விவசாயிகள் டில்லியில் தங்கல் போராட்டத்தைத் தொடங்கி இன்றுடன் 6 மாத காலம் நிறைவடைகிறது.   இன்று வரை மத்திய அரசு 3 வேளான் சட்டங்களைத் திரும்பப் பெற முன்வரவில்லை.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில் இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெறவும் ரத்து செய்யவும் தீர்மானம் இயற்றி வலியுறுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.  ஆகவே டில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.