சென்னை

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

தமிழகத்தில் அடுத்த மாத இறுதி வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.   இதையொட்டி தமிழகத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.  இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஏற்கனவே மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.  மேலும் அவர் தென் சென்னையில் பணிகளை ஆய்வு செய்தார்.

இன்று இரண்டாம் கட்டமாக வட சென்னை பகுதியில் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.  அவர் பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஓட்டேரி, பிரிட்டானியா நகர், புழல் உபரி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் மற்றும் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஆய்வுசெய்ய உள்ளார்.

நாளையும் நாளை மறுதினமும் சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். நாளை சேலத்துக்குச் செல்லும் முதல்வர், வாழப்பாடியில் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.  மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் மற்றும் விசைத்தறி சங்கத்தினருடன் கலந்துரையாடுகிறார்,

நாளை மறுதினம் முதல்வர் தர்மபுரிக்குச் சென்று ஒகேனக்கல் குடிநீர் விநியோக திட்டப் பணிகளைப் பார்வையிடுகிறார்.  அத்துடன் பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடும் முதல்வர், நலத் திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.