சென்னை

வ்வொரு மாவட்டத்திலும் வெளிநாட்டினர் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தனிக் குழுவை அமைக்க டிஜிபி க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

இந்தியாவுக்கு பல நாடுகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர்.  இவர்களில் இலங்கை, சீனா, நைஜீரியா, ஈரான் மற்றும் வங்க தேசம் போன்ற நாடுகளில் இருந்து வருவோர் அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கும் அதிகமாகத் தங்கி உள்ளதாகப் புகார்கள் வருகின்றன.   இந்த புகாரின் அடிப்படையில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர்.  அவ்வாறு கைதானவர்களில் சிலர் ஜாமின் கோரி உள்ளனர்.  வேறு சில வெளிநாட்டவர்கள் முன் ஜாமீன் கோரி உள்ளனர்.

இந்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தன.   வழக்கில் டி ஜி பி சார்பில் அரசு வழக்கறிஞர் கோபிநாத் மற்றும் மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ஆர்த்தி ஆகியோர் ஆஜர் ஆகினர்.  நேற்று இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி தண்டபாணி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர் தனது உத்தரவில், “இந்தியாவுக்கு வெளிநாட்டினர் வருவதற்கும் திரும்பச் செல்வதற்குமான நடைமுறையை, முறையாகப் பின்பற்றுவதில் நாட்டின் பாதுகாப்பு உள்ளது.  எனவே குடியுரிமை துறை, வெளிநாட்டினருக்கான பதிவுத்துறை அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும். இந்தியாவுக்குச் சுற்றுலா, வணிகம், வேலை என்ற போர்வையில், வெவ்வேறு நாடுகளில் இருந்து வருபவர்கள், அனுமதிக்கப்பட்ட நாட்களை மீறித் தங்குகின்றனர்.

இவர்களில்பலர் குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். சிலரது செயல்பாடுகள்  நாட்டின் பொருளாதாரம், அமைதியை உலுக்கும் விதத்தில் உள்ளன.  ஏற்கனவே விசா காலத்தை மீறித் தங்கி இருப்பவர்கள், சட்டவிரோதமாக வந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு விரிவான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.  அப்படி இருந்தும், விசா காலம் முடிந்து 13 ஆயிரத்து 289 பேர் தங்கி இருப்பதாகத் தெரிகிறது.

இவர்கள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை மாவட்டங்களில் உள்ளனர்.மேலும் பலர் போலி ஆவணங்கள் வாயிலாக இந்திய அடையாள அட்டையையும் பெற்றுள்ளனர்.  மத்திய அரசு பிறப்பித்த வழிமுறைகளின் அடிப்படையில், உரிய அனுமதியின்றி தங்கி இருப்பவர்களை, அவர்கள் நாட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.  அதே வேளையில்  இவர்களை அடையாளம் காண மாநில அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை.

ஏனெனில் மத்திய உள்துறையின் வழிமுறைகளைப் பின்பற்றுவதில், மெத்தனம் காட்டப்படுகிறது. ஆகவே மத்திய அரசின் வழிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற, சில உத்தரவுகளைப் பிறப்பித்தால் தான், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், அனுமதிக்கப்பட்ட நாட்களை மீறித் தங்கும் பிரச்சினைக்கு முடிவு ஏற்படும்.

தமிழகத்துக்குள் பிற நாட்டவர்கள் வரும் போது, அவர்களின் பாஸ்போர்ட் விபரங்கள், எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விபரத்தை மாநில போலீசுக்கு, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும், மாநிலத்தில் சட்டவிரோதமாக வருபவர்களை அடையாளம் கண்டு விட்டால், அவர்களை உடனடியாக முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்; மேலும் அவர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

தவிரச் சிறைகளில் இருக்கும் வெளிநாட்டவர்களைக் கண்டறிந்து, தண்டனை காலம் முடிந்த உடன் அவர்கள் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.  காவல்துறையினர் வெளிநாட்டவர் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளிநாட்டவர் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தனிப்பிரிவை, டி.ஜி.பி., ஏற்படுத்த வேண்டும்” என்நீதிபதி தெரிவித்துள்ளார்.